நீலகிரியில் அரசு தோட்டங்களை பராமரிக்கும் ஊழியர்களின் பரிதாப நிலை


நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அரசு தோட்டங்களை பல ஊழியர்கள் பராமரித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் பாரமரிக்கும் தோட்டங்களை போல் அல்லாமல் ஊழியர்களின் வாழ்க்கையோ மிகவும் பரிதாபமாக உள்ளது..
பராமரிக்கும் ஊழியர்கள் பணி நிரந்தரத்திற்காக போராட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் பூங்கா மற்றும் பண்ணைகளில் 800க்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்கள். தற்காலிக ஊழியர்களாகவே வேலை செய்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தினர்.
அதன் விளைவாக, கடந்த 2006-ஆம் ஆண்டு 10 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யவும், கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்கவும் அரசாணை- 22 வெளியிடப்பட்டது. ஆனால், அது பயனற்ற ஒன்றாகவே உள்ளதாக தோட்டத்தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
"பெயரளவிலேயே உள்ள பணிநிரந்தரம்":
2008-ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் இன்று வரை சம்பளம் இழுப்பறியாகவே உள்ளது. பகுதி நேர ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சம்பளம் மட்டுமே இன்று வரை நிரந்தர பணியாளர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"பிடித்தம் உண்டு சலுகை இல்லை":
பணிநிரந்தரம் என்ற பெயரில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் குடும்ப நலநிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அதனால் எவ்வித சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை என அரசு தோட்ட பராமரிப்புத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
                                                                             .-பசுமை நாயகன்