நூற்றுக்கணக்கான யானைகளும் கடமான்களும் மயில்களும் எண்ணற்ற பறவைகளும்


வேலைக்கு முன் வரும் ஓய்வை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முகமது நபிகள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான வாக்கியம்.
   வருடத்தின் சில நாட்களில் தொடர்ச்சியாக கிடைக்கும் ஓய்வு இதுபோல இருக்க வேண்டும் என்று சில இடங்கள் நம்மை ஈர்த்துக் கொள்கின்றன. சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தின் மசினகுடியில் செலவிட்ட விடுமுறை நாட்கள், இயற்கையே என்னை வாரி அணைத்துக் கொண்ட உணர்வைத் தந்தன. இயற்கையும் மனிதர்களும் இணைந்தே சுமுகமாக வாழ முடியும் என்ற பாடம், இந்தக் கிராமத்தில் இருக்கிறது. நூற்றுக்கணக்கான யானைகளும் கடமான்களும் மயில்களும் எண்ணற்ற பறவைகளும் மக்களோடு எந்த மோதலும் இல்லாமல் வாழும் கிராமம் இது.
   யானைகள் நீர் குடிப்பதற்கு தார்ச்சாலையைக் கடந்து செல்லும் காட்சிகள் இங்கு மிகச் சாதாரணம். முதுமலை, பந்திப்பூர், வயநாடு ஆகிய மூன்று பெரும் வனப்பிரதேசங்களுக்கு நடுவில் இருப்பதால் இயற்கையின் வனப்பு கெடாமல் இருக்கிறது. சுற்றுலா பெருக்கத்தால் மாசுபட்டுள்ள உதகமண்டலத்திற்கு அருகில் இருந்தாலும் (இங்கிருந்து, ஊட்டிக்கு 29 கிலோமீட்டர்) உள்ளூர் மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இந்தக் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கிறது. மசினகுடியில் போய் சேர்ந்ததும் “நீங்கள் சென்னையிலிருந்து ஒரு பிளாஸ்டிக்  புட்டியில் தண்ணீர் எடுத்து வந்திருப்பீர்கள். அதை கிராமத்தில் எங்காவது எறிந்துவிட்டு புதிய புட்டி வாங்காதீர்கள். அதே புட்டியை பயன்படுத்துங்கள்.” என்று சொன்னார் சுற்றுலா வழிகாட்டியான ஆபித். அதே புட்டியில்தான் வீடு திரும்பும்வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தினோம்.
  கடந்த வருடம் பருவ மழை குறைவாக இருந்தபோதும்கூட மாயாறு, மசினகுடி மக்களை வாட்டவில்லை. அவர்களுக்கும் ஊருக்கு வருகிறவர்களுக்கும் போதுமான  நீரைக் கொடுத்து வருகிறது. விலங்குகளைத் துன்புறுத்தாத அளவுக்கு குறைந்த ஒளியுள்ள விளக்குகளை இரவில் பயன்படுத்த சுற்றுலா விடுதிகள் இப்போது பழக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில விடுதிகளில் விருந்துகளின்போது, ஒலியளவு அதிகமானாலும், உள்ளூர் பழங்குடி மக்கள் அதனால் விலங்கினங்களும் பறவையினங்களும் அச்சமுறும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல இடம் இருக்கிறது. இந்த இடம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் ஆசை.
  இந்தப் பயணத்தின்போது வெள்ளை வயிற்று மின் சிட்டை ஜோடியாகப் பார்க்க முடிந்தது எங்களுக்குக் கிடைத்த  பெரும் வாய்ப்பு. பாம்புப் பருந்து, வல்லூறு, புள்ளிச் சில்லை, சின்னான்கள், மைனாக்கள் போன்றவற்றை அடிக்கடி காண முடிந்தது. ஒரு முறை பட்டாணிக் குருவியையும், கரிச்சானையும் பார்த்தபோது பறவை ஆர்வலரான என் துணைவி சுபாவுக்கு இந்தப் பயணம் முழுமை அடைந்த திருப்தி கிடைத்தது. இந்தப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்களை பரவலாக்கிய பறவை ஆர்வலர்கள் ச.முகமது அலி, க.ரத்னம் ஆகிய இருவரது பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தகுந்தது.
    முதுமலையிலும் பந்திப்பூரிலும் புலியைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் புலிகள் அடர்த்தியாக வாழும் வயநாட்டுக்குப் போனோம். அங்கு சற்று முன் கடந்து சென்ற புலியின் கால் தடங்களைக் கண்டோம். வயநாட்டு மலர்த் திரவியங்களின் மணத்தோடும் காட்டின் நினைவோடும் வீடு திரும்பினோம்.

                                                                                         - பீர் முகமது


நீலகிரி வனப்பகுதியில் திடீர் தீ விபத்து


    நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
    கூடலூரை அடுத்துள்ள நாடுகானி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல்அறிந்து வனத்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியோடு, காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
   வறட்சி காரணமாக, சமீபத்தில் உதகையின் பல்வேறு வனப்பகுதிகளில் வனத் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மதியம் நம்பாலாக்கோட்டை சிவன் கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதே போல் தேவாலா ஊசி மலை பகுதியிலும் வனத் தீ ஏற்பட்டுள்ளது.
                                                            -பசுமை நாயகன்

நீலகிரியில் அரசு தோட்டங்களை பராமரிக்கும் ஊழியர்களின் பரிதாப நிலை


நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அரசு தோட்டங்களை பல ஊழியர்கள் பராமரித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் பாரமரிக்கும் தோட்டங்களை போல் அல்லாமல் ஊழியர்களின் வாழ்க்கையோ மிகவும் பரிதாபமாக உள்ளது..
பராமரிக்கும் ஊழியர்கள் பணி நிரந்தரத்திற்காக போராட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் பூங்கா மற்றும் பண்ணைகளில் 800க்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்கள். தற்காலிக ஊழியர்களாகவே வேலை செய்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தினர்.
அதன் விளைவாக, கடந்த 2006-ஆம் ஆண்டு 10 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யவும், கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்கவும் அரசாணை- 22 வெளியிடப்பட்டது. ஆனால், அது பயனற்ற ஒன்றாகவே உள்ளதாக தோட்டத்தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
"பெயரளவிலேயே உள்ள பணிநிரந்தரம்":
2008-ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் இன்று வரை சம்பளம் இழுப்பறியாகவே உள்ளது. பகுதி நேர ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சம்பளம் மட்டுமே இன்று வரை நிரந்தர பணியாளர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"பிடித்தம் உண்டு சலுகை இல்லை":
பணிநிரந்தரம் என்ற பெயரில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் குடும்ப நலநிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அதனால் எவ்வித சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை என அரசு தோட்ட பராமரிப்புத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
                                                                             .-பசுமை நாயகன்

தொடர் மழையால் உதகை ரயில்பாதையில் மண்சரிவு

   நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குன்னூர்- உதகை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வெலிங்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த மண் சரிவால், குன்னூர்- உதகை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் மலை ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அதனால், சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
தொடரும் மழையால் குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பல இடங்களில் சிறு பாறைகள் விழத் தொடங்கியுள்ளன. மழை நீடிக்கும் பட்சத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

                                                                                         - தேனி.K.ராஜா

மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா நேரில் பார்வையிட்டார்

கூடலூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா நேரில் பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் பெய்த தொடர் மழையால், பந்தலூர், பொன்னானி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் கரைபுரண்ட நீர் ஊருக்குள் புகுந்ததால், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

மூலிகை பெட் ரால் ராமர் பிள்ளை



''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' ....இத நம்பலாமா ???                                                                                         நன்றி :விகடன்
அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்